தமிழக அரசியல் கட்சிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக அல்லது அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க., Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால்தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில் செப்டம்பர் 17, 1949இல் [4] கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின்கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.